துதி ( Thuti )

Posted on 30-08-2018 , by: Raghuram Shankar , in , , , , , , 0 Comments

நோயைத் துரத்தும் துத்தி

பெயர்க்காரணம் :

துத்தித் தாவரத்துக்கு கக்கடி, கிக்கசி, அதிபலா ஆகிய வேறுபெயர்கள் உள்ளன. ‘துத்தி’ என்றால் சாப்பிடக்கூடியது என்ற பொருளில் அகராதி பதிவுசெய்கிறது. சிறுதுத்தி, மலைத்துத்தி, பெருந்துத்தி, வாசனைத்துத்தி, அரசிலைத்துத்தி, கருந்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத் துத்தி எனப் பல வகைகள் உள்ளன.

அடையாளம் :

அகன்ற இதய வடிவமுடைய இலைகளில், ரம்பங்கள் போன்ற விளிம்பு காணப் படும். புதர்ச் செடி வகை. பூக்கள் மஞ்சள் நிறத்தில் காட்சி தரும். தாவரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ரோம வளரிகள் உள்ளன. சிறுபிளவுகள் கொண்ட பெரிய ‘தோடு’ போன்ற இதன் காய்கள் வித்தியாசமான தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

துத்தியின் தாவரவியல் பெயர் ‘அபுடிலன் இண்டிக்கம்’ (Abutilon indicum). இதன் குடும்பம் ‘மால்வாசியே’ (Malvaceae). அபுடிலின் – A (Abutilin-A), அடினைன் (Adenine), ஸ்கோபோலெடின் (Scopoletin), ஸ்கோபரோன் (Scoparone) ஆகிய தாவர வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது.

உணவாக :

ஆரம்ப நிலை மூலநோயைக் குணப்படுத்தக்கூடிய மூலிகைகளில், இனிப்புச் சுவையுடைய துத்திக்கு உயர்ந்த இடம் வழங்கலாம். துத்தி இலைகளோடு பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, பாசிப்பருப்பு சேர்த்துச் சமைக்கப்படும் ‘கீரைக் கடையல்’ மூல நோயை ஆரம்பத்திலேயே வேரறுக்கும் மாமருந்து.

மூலநோயில் உண்டாகும் ரத்தக் கசிவு, ஆசனவாய் எரிச்சல், வலி முதலியன குணமாகும். தீய்ந்து கடினமாகி வெளியேறாமல் இருக்கும் மலத்தையும் இளக்கும். சிறுநீரையும் சிரமமின்றி வெளியேற்றும்.

‘கணீர் கணீர்’ என்ற ஒலியுடன் இருமல் துன்பப்படுத்தும்போது, இதன் பூக்களை நெய்விட்டு வதக்கிச் சாப்பிட விரைவில் நிவாரணம் கிடைக்கும். உணவு முறைக்குள் இதன் பூக்களைச் சேர்த்து வர, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதை ‘துத்திமலரை நிதந்துய்க்கின்ற பேர்களுக்கு மெத்த விந்துவும் பெருகும்…’ எனும் பாடல் வரியின் மூலம் அறியலாம்.

குருதிப் பெருக்கை அடக்கும் செய்கை இருப்பதால் வாந்தியில் வரும் குருதியையும் ஆசனவாயில் வடியும் குருதியையும் நிறுத்தும். உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து, பலத்தை உண்டாக்கும்.

மருந்தாக: நீரிழிவு நோய் உண்டாக்கப்பட்ட ஆய்வு விலங்குகளில், இன்சுலின் சுரப்பைத் துத்தி இலைச்சத்து அதிகரித்திருக்கிறது. துத்தியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சத்துக்கள், மூளையில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் (Glioblastoma cells) மற்றும் பெருங்குடல் புற்று செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியதை ஆராய்ச்சிப் பதிவு செய்கிறது.

மனப் பதற்றத்தைக் குறைக்கும் தன்மையும் (Anxiolytic) துத்தி இலைகளுக்கு இருக்கிறது. ஆய்வகங்களில் கொசு இனங்களை அழிப்பதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், துத்தி இலைகள் சிறந்த பலனைக் கொடுத்திருக்கின்றன. ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகளைக் கட்டுப்படுத்துவதால் (Mast cell stabilization), ஆஸ்துமா நோயின் குறிகுணங்களைக் குறைக்கப் பயன்படும்.

வீட்டு மருந்தாக :

கட்டிகள், வீக்கங்களுக்கு இதன் இலைகளை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம். சிறுநீரடைப்பு ஏற்படும் போது, துத்தி இலை மற்றும் சின்ன வெங்காயத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, அடிவயிற்றுப் பகுதியில் ஒத்தடம் இடலாம். வீக்கமுறுக்கி செய்கை இருப்பதால் வாத நோய்களுக்கும் சிறந்த மருந்தாகிறது.

குளிக்கும் நீரிலும் இதன் இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்துப் பயன்படுத்த உடல் சுறுசுறுப்படையும். இலைகளை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அதில் சிறிது உப்பு சேர்த்து வாய் கொப்புளிக்க, பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறுகளில் வீக்கம் முதலியவை மறையும். வெள்ளைப்படுதல் நோயைக் குணமாக்க இதன் விதைகளைக் குடிநீரிலிட்டுப் பயன்படுத்துகின்றனர். தோல் நோய்களைப் போக்கவும் இதன் விதை உள்ளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment