Sukku

Posted on 28-07-2018 , by: Raghuram Shankar , in , , , , 0 Comments

உன்னத மூலிகை சுக்கு.

சுக்கின் பெருமை பற்றிப் பேசத் தொடங்கும்போதே, நாசித் துளைகளில் அதன் நெடியுடன்கூடிய மணம் தவழ்கிறது. பாரம்பர்ய முறைப்படி, பசுமாட்டுச் சாணத்தை எரித்துக் கிடைக்கும் சாம்பலில் தோல் சீவிய இஞ்சியைப் புதைத்து உலர வைத்து அல்லது சுண்ணாம்பில் இஞ்சியை மூழ்கவைத்து ஈரம் போகும்வரை உலரவைத்து உருவாக்கப்படுவதே சுக்கு.

உபகுல்லம், கடுபத்திரம், செளபன்னம், விடமூடிய அமிர்தம், வேர்க்கொம்பு, அருக்கன், அதகம், சுண்டி சொண்டி போன்றவை சுக்கின் வேறு பெயர்கள். இதற்கு வாய்வு அகற்றி, பசி தூண்டி, வெப்பமுண்டாக்கி போன்ற செய்கைகள் உண்டு. `சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்ற பழமொழியே சுக்கின் பெருமைக்குச் சான்று. `சுக்குக்குப் புறநஞ்சு, கடுக்காய்க்கு அகநஞ்சு’ என்பது அறிவியல் பேசும் மருத்துவமொழி. அதாவது, நச்சுத்தன்மை உள்ள சுக்கின் புறணியை நீக்கியும், கடுக்காய்க்கு உள்ளிருக்கும் கொட்டையை நீக்கியும் பயன்படுத்த வேண்டும் என்பதை அந்த மருத்துவமொழி உணர்த்துகிறது.

சுக்கை நுகரும்போது உண்டாகும் பிரத்யேக நெடிக்கு, அதில் உள்ள `ஷோகால்’ எனும் வேதிப்பொருளே காரணம். புற்று செல்களின் வளர்ச்சியைச் சுக்கில் உள்ள வேதிப்பொருள்கள் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தி, உடலை உற்சாகமாக்க சுக்கு பயன்படுகிறது. `இ-கோலி’ பாக்டீரியாக்களை அழித்து, குடல் பகுதிகளுக்குச் சுக்கு பாதுகாப்பளிப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. மதிய வேளையில் சுக்கு சார்ந்த மருந்துகளையும், இரவு வேளையில் கடுக்காய் சார்ந்த மருந்துகளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.

கி.பி 13-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த மார்கோ போலோ, நம் உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் சுக்கு மற்றும் இஞ்சி குறித்துப் பதிவுசெய்துள்ளார். சுக்கு, திப்பிலி, மாதுளம்பழச்சாறு சேர்த்துத் தயாரிக்கப்படும் அரிசிக்கஞ்சியை, `சுவை மிகுந்த மருந்தாக’ப் பல்வேறு நோய்களுக்குப் பழங்காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். தலைவலி மற்றும் உடல்சோர்வு நீக்க, சுக்கும் கருப்பட்டியும் சேர்ந்த சுக்கு வெந்நீரைப் பருகும் வழக்கத்தைத் தென்தமிழகத்தில் நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கின்றனர்.

சுக்கைப் பொடிசெய்து, கரும்புச் சாற்றில் கலந்து குடித்தால், வயிற்றில் உண்டாகும் எரிச்சல் நீங்கும் என்கிறது தேரன் வெண்பா. கபநோய்கள், தலைபாரம், இருமல், இரைப்பு, வயிறு உப்புசம், செரிமானமின்மை, உடல்வலி போன்ற பல்வேறு குறிகுணங்களைக் குறைக்கச் சுக்கு பயன்படுகிறது. சுக்குடன் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, பாலுடன் கலந்து, பனைவெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் சுக்குக் காபி, பத்தாண்டுகளுக்கு முன்புவரை குளிர்காலங்களில் அனைவரது வீடுகளிலும் புழங்கிய சுவைமிக்க பானமாகும். `இஞ்சி டீயா, சுக்குக் காபியா… எது மிகவும் சுவையானது’ என்று பட்டிமன்றம் நடத்துமளவு இரண்டுக்கும் ரசிகர்கள் அதிகம். இரண்டுக்குமே மருத்துவக் குணங்கள் ஒன்று என்பதே முடிவு.

சுக்கை நீர்விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட, தலைபாரம் உடனடியாகக் குறையும். சுக்கையும் கற்கண்டையும் பொடி செய்து இளநீரில் இரண்டு சிட்டிகை கலந்து கொடுத்தால், மூச்சுவிடுவதில் உள்ள சிரமம் குறையும். பருப்பு வகைகள், கீரை ரகங்களைச் சமைக்கும்போது சிறிது சுக்குத்தூள் சேர்த்தால், வாய்வுக்கோளாறுகள் நீங்கி, செரிமானம் எளிதாகும். குடல்பகுதிகளின் செயல்பாட்டைச் சிறப்பாக்க, சுக்குத்தூளை நெய்யில் கலந்து சாப்பிடலாம்.

`இஞ்சி டீயா, சுக்குக் காபியா… எது மிகவும் சுவையானது’ என்று பட்டிமன்றம் நடத்துமளவு இரண்டுக்கும் ரசிகர்கள் அதிகம். இரண்டுக்குமே மருத்துவக் குணங்கள் ஒன்று என்பதே முடிவு!

காய்ச்சல் குடிநீர்

சுக்கு, கடுக்காய்த்தோல், நிலவேம்பு, வேம்பு, சீந்தில் போன்றவற்றை சம அளவு எடுத்து, நீர்விட்டுக் கொதிக்கவைத்துக் குடித்தால் காய்ச்சலின் தீவிரம் குறையும். விஷ உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் குறி குணங்களுக்கும் இந்த நீர் அற்புதமான பலனைக் கொடுக்கும்.

முடிச்சுக் கஞ்சி

சுக்கை ஒரு துணியில் கட்டி, அரிசி வேகும்போது அதில் மூழ்கச்செய்ய வேண்டும். அந்தக் கஞ்சியைக் குடித்தால் காய்ச்சல் தணியும். அடைமழைக் காலங்களில், சுக்கு சேர்ந்த பானங்களைக் குடித்தால், மழைக்கால நோய்கள் நெருங்காது.

தாய்க்கான மருந்து

சுக்கை முதன்மையாக வைத்துத் தயாரிக்கப்படும் `செளபாக்யசுண்டி லேகியம்’, குழந்தை ஈன்ற தாய்க்கு பால்சுரப்பை அதிகரிக்கவும் பிரசவத்தால் ஏற்பட்ட களைப்பைப் போக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. பிரசவித்த பெண்களுக்கு, கிராமங்களில் சுக்கை மையப்படுத்தியே உணவுகள் வழங்குவார்கள். குழந்தைகளுக்கு உண்டாகும் வயிறு உப்புசத்துக்கு, தோல் சீவிய சுக்கையும் சீரகத்தையும் நன்றாகப் பொடித்து, சலித்து தாய்ப்பாலில் மூன்று சிட்டிகை குழைத்துக் கொடுக்க, குழந்தையின் முகத்தில் உற்சாகத்தைக் காணலாம்.

சுக்கு, சீரகம், தனியா (மல்லி) சம அளவு எடுத்து நீருடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து அருந்தினால், காரணமின்றி வரும் தலைவலி உடனடியாக மறையும். மிதமான பேதிக்கு வழங்கப்படும் நிலவாகைச் சூரணத்துடன் சிறிது சுக்குப்பொடி சேர்த்துக் கொடுத்தால் குடல் புழுக்கள் வெளியேறும். வாயுவைப் போக்கும் குணமிருப்பதால், வாயுவைக் கட்டுப்படுத்தத் தயாரிக்கப்படும் சித்த மருந்துகளில் சுக்கு சேர்க்கப்படுகிறது.

மருந்துப் பெட்டகம்

சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தயாரிக்கப்படுவதே `திரிகடுகுச் சூரணம்.’ அவசர நேரங்களில் பயன்படும் நசிய மருத்துவ சிகிச்சைகளில் சுக்குப்பொடி பயன்படுகிறது. இந்துப்பு, சோற்றுப்பு என மருத்துவக் குணம் மிகுந்த ஐந்து உப்புகளுடன் சுக்கு மற்றும் தயிர் சேர்த்துத் தயாரிக்கப்படும் `தயிர்சுண்டி சூரண’த்தைப் பயன்படுத்த அஜீரணம் சார்ந்த அனைத்து தொந்தரவுகளும் நீங்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் அமுக்கரா சூரணத்திலும் சுக்கின் பங்கு அதிகம். இஞ்சி லேகியம் மற்றும் கேசரி லேகியத்திலும் சுக்கு சேர்க்கப்படுகிறது.

மெட்ராஸ் கறி மசாலா (Madras curry powder)

அரை கப் கொத்தமல்லி, கால் கப் சீரகம், தலா இரண்டு டீஸ்பூன் கடுகு மற்றும் மிளகு போன்றவற்றை இளம்வறுவலாக வறுத்துப் பொடித்துக்கொள்ள வேண்டும். பின்பு, தலா ஒரு டீஸ்பூன் சுக்குத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டும். இதற்கு, ’மெட்ராஸ் கறி மசாலா’ என்று பெயர். இந்த மசாலாவைப் பயன்படுத்தினால் சுவையும் ஆரோக்கியமும் உறுதி.

சுக்குத் தைலம்

சுக்கு மற்றும் வேறு சில மூலிகைகளுடன் நல்லெண்ணெய், பசும்பால் சேர்த்துத் தயாரிக்கப்படுவதே சுக்குத் தைலம். இதைத் தலையில் தேய்த்துக் குளித்தால் வாதநோய்கள் மற்றும் கபநோய்கள் குணமாகும். ஆரம்ப நிலையில் இருக்கும் காது தொடர்பான பிரச்னைகள் மறையும். சுக்குத் தைலத்தை நசியத்துக்கான மருந்தாகவும் வாய் கொப்பளிக்கும் எண்ணெயாகவும் உடலில் பூசும் எண்ணெயாகவும் பயன்படுத்தலாம்.
`விடமூடிய அமிர்தம்’ என்று இதன் பெயர் உணர்த்துவதுபோல, நச்சு நிறைந்த தோலுக்குள் இருக்கும் சுக்கு, நலம் பயக்கும் அமிர்தமே. பல்வேறு நோய்களைத் தடுத்து, `மதில்’ போல நின்று பாதுகாப்பளிக்கும் `சுக்கு’, நமது ஆரோக்கியத்தின் ‘நம்பகமான பாதுகாவலன்.’

Buy Right, Consume Healthy – The Best Organic Store In Chennai – “Trust Organics”. We sell genuine organic products that are 100% Natural with no preservatives or chemicals. You can order products for door delivery by a Call / Watsapp@ 9884144477. You can download our App orgazone . We have our organic stores currently  at – Trust Organic Store in Besant Nagar, Trust Organic Store in Nungambakkam, Trust Organic Store in Annanagar, Trust Organic Store in Arumbakkam.

Leave a comment